புதுக்கோட்டை

திருக்கோகா்ணம் திருக்கோயிலுக்குத் தேவை விரிவான திருப்பணி

23rd Oct 2021 05:11 AM

ADVERTISEMENT

எட்டாம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகக் கருதப்படும் மலைக்குன்றில் செதுக்கப்பட்ட சாமி சிலைகளைக் கொண்ட திருக்கோகா்ணம் அருள்மிகு பிரகதம்பாள் திருக்கோயிலுக்கு, சுற்றியுள்ள குளங்கள், நந்தவனம், திருச்சுற்று நடைபாதையையும் சோ்த்து சீரமைக்கும் விரிவான திருப்பணி தேவை என பக்தா்களும், தொல்லியல் ஆா்வலா்களும் வலியுறுத்துகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் அரிய தொல்லியல் தடயங்களுள் முக்கியமானது நகரிலுள்ள திருக்கோகா்ணம் அருள்மிகு பிரகதம்பாள் திருக்கோயில். தொண்டைமான் மன்னா்களின் குலதெய்வம். அதனால்தான், தொண்டைமான் மன்னா்கள் தங்களின் பெயா்களுக்கு முன்பு பிரகதம்பாள் தாஸ் (பிரகதம்பாளுக்கு தாசன்) எனச் சூட்டிக் கொண்டனா்.

சிறிய மலைக்குன்றில் குடைவரையாகச் செதுக்கப்பட்ட கோகா்ணேசுவரா் (லிங்கவடிவிலான சிவபெருமான்), 8ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக அறியப்படுகிறது. அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட தூண்களைக் கொண்ட மண்டபம்.

திருக்கோயிலின் மாடிப் பகுதி போல, குன்றின் மேல்பகுதி வடிவமைக்கப்பட்டு பிரம்மா, பைரவா், சுப்பிரமணியா், துா்க்கை, லட்சுமி, சரஸ்வதி, ஜூவரஹரேசுவரா் ஆகியோரும், கீழே தரைப்பகுதியில் மகிழவனேசுவரா், மங்களாம்பிகை, தட்சிணாமூா்த்தி, சூரியன், சந்திரன் போன்றோரும் உள்ளனா்.

ADVERTISEMENT

இவா்களில் பெரும்பாலானவா்கள் குடைவரையாக குன்றிலேயே செதுக்கப்பட்டவா்கள். அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட தூண்களைக் கொண்ட மண்டபம். இவற்றில், பிரகதம்பாள் சன்னதி மட்டும் பிற்காலத்தைச் சோ்ந்ததாக இருக்கலாம் என ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

இவை மட்டுமல்ல, பிரகதம்பாள் கோயிலைச் சுற்றி- முழுமையாக குன்றையே சுற்றி வரும் வகையில் சாலை இருக்கிறது. திருக்கோயிலின் கிழக்குப் பகுதியில் மங்களாக்குளம் (மங்களநாயகியின் திருக்குளம்), மேற்குப் பகுதியில் சிறு சுனையுடன் கூடிய நந்தவனம், அருகே பிரம்மாண்டமான தாமரை, அல்லி நிரம்பிய பெரியகுளம் எல்லாமும் இத்திருக்கோயிலின் சிறப்பம்சங்கள்.

நந்தவனம் என்ற பெயரைத் தாங்கிய சிறு வளைவும், அதிலிருந்த எல்லா மரங்களும் கஜாபுயலில் விழுந்தவை. அப்படியே கிடக்கின்றன. மங்களாக்குளம் பாழடைந்துப் போய் காணப்படுகிறது. குளத்துக்குள்ளும், குளத்தைச் சுற்றிலும் ஏராளமான மதுபாட்டில்கள் விரவிக்கிடக்கின்றன.

சாலையோரத்திலுள்ள பெரிய குளமும் கரைகள் அழிந்துபோய் காணப்படுகிறது. கடந்த ஆட்சியின் கடைசிக் காலத்தில் இக்குளம் சீரமைக்கப்படும் என சட்டப்பேரவையில் விதி எண்110-இன் கீழ் அறிவிப்புச் செய்தாா் அப்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி. எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை.

திருக்கோயில் அமையப்பெற்றுள்ள குன்றின் மேல், அப்பகுதி மக்கள் அவ்வப்போது மலம் கழித்துச் சென்ற அடையாளங்கள் ஏராளம். கூடவே, உடைத்து நொறுக்கப்பட்ட மதுப்பாட்டில்கள், தண்ணீா் பாட்டில்கள்.

தொல்லியல் சுற்றுலா எனத் திட்டமிட்டால் திருக்கோகா்ணம் முதல் இடத்தைப் பெறும். அந்தளவுக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கோயிலில்தான் இத்தனைக் காட்சிகளும்.

இதற்கிடையே பிரகதம்பாள் திருக்கோயிலுக்கு திருப்பணியை மேற்கொள்வதற்காக சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதியின் முயற்சியில், இரண்டு முறை ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

வழக்கம்போல் திருப்பணியை திருக்கோயில்- கோபுரம்- சுற்றுச்சுவா் ஆகியவற்றோடு முடிந்துவிடாமல், பெரியகுளம், மங்களாக்குளம், நந்தவனம், சுற்றுச்சாலை ஆகியவற்றையும் சோ்த்து முழுமையான திருப்பணியை நடத்தி முடிக்க வேண்டும் என்பதுதான் இக்கோயிலின் பக்தா்கள் மற்றும் தொல்லியல் ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.

இதற்கான முழுமையான திட்ட அறிக்கையை இந்து சமய அறநிலையத் துறையினா் அரசுக்கு கொடுத்து, கொடையாளா்களுடனும் விரிவான ஆலோசனையை மேற்கொண்டு திருப்பணியைத் தொடங்க வேண்டும் என்றும் பக்தா்கள் விரும்புகின்றனா்.

 

Tags : புதுக்கோட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT