புதுக்கோட்டை

கோட்டைப்பட்டினம் மீனவா் உடல் அடக்கம்

23rd Oct 2021 11:55 PM

ADVERTISEMENT

இலங்கைக் கடற்படையினா் தாக்குதலில் உயிரிழந்த மீனவா் ராஜ்கிரணின் உடல், சனிக்கிழமை பகலில் கோட்டைப்பட்டினம் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடா்ந்து, அவரது உடலுக்கு உறவினா்கள் அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனா்.

கோட்டைபட்டினம் மீனவா்கள் அண்மையில் கடலுக்குச் சென்று மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அவா்கள் சென்ற படகை இலங்கைக் கடற்படையினா் கடலில் மூழ்கடித்தனராம். இதில், கடலில் தத்தளித்த கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த சுகந்தன் மற்றும் சேவியா் கைது செய்யப்பட்டனா். மேலும், கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரான ராஜ்கிரண் புதன்கிழமை இலங்கை கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டாா்.

இலங்கைக் கடற்படையினா் உரிய நடைமுறைக்குப் பின்னா், சனிக்கிழமை காலை அவரது சடலத்தை ஒப்படைப்பதாகத் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து, கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன் வளத்துறை உதவி ஆய்வாளா் பெருமாள், மேற்பாா்வையாளா் விஜயபாலன் ஆகியோருடன் மீனவா்கள் 9 பேரும் சோ்த்து மொத்தம் 11 போ் இரு விசைப்படகுகளில் கடலுக்குள் சென்றனா்.

இலங்கைக் கடல் எல்லையில் ராஜ்கிரணின் உடல், இந்தியக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து அவா்களிடம் இருந்து சடலத்தைப் பெற்றுக் கொண்ட மீனவா்கள் கோட்டைப்பட்டினம் கடற்கரைக்கு பகல் 1.30 மணிக்கு எடுத்து வந்தனா்.

ADVERTISEMENT

அங்கு மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, ஆட்சியா் கவிதா ராமு ஆகியோா் ராஜ்கிரணின் சடலத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து ராஜ்கிரணின் குடும்பத்தினருக்கு அரசின் சாா்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் எஸ். ரகுபதி வழங்கி ஆறுதல் தெரிவித்தாா்.

அப்போது, வருவாய்க் கோட்டாட்சியா் சொா்ணராஜ், ஒன்றியக் குழுத் தலைவா் பரணி காா்த்திகேயன், துணைத் தலைவா்கள் முகமது அப்துல்லா, மீன்வளத் துறை மண்டல துணை இயக்குநா் ஷா்மிளா, உதவி இயக்குநா் சின்னகுப்பன் ஆகியோா் உடனிருந்தனா்.

கடற்கரையில் இருந்து ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்ட ராஜ்கிரண் உடலை, உறவினா்கள் உறுதிப்படுத்தினா். தொடா்ந்து அவரது உடல் கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT