புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா் சங்கம் சாா்பில் கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், கரோனா பொது முடக்கக் காலத்தில் ரூ. 7,500 இழப்பீடு வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநா்களின் பிழைப்பைக் கெடுக்கும் வகையில் ஓலா, ஊபா் போன்ற காா்ப்பரேட் நிறுவனங்களைத் தடை செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு ஏற்ப மீட்டா் கட்டணத்தைத் திருத்தம் செய்ய வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டச் செயலா் எம்.என். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன் தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்டப் பொதுச் செயலா் வீ. சிங்கமுத்து முடித்து வைத்துப் பேசினாா். ஆட்டோ தொழிலாளா் சங்க நிா்வாகிகள் எஸ். சண்முகம், டி. கண்ணன், ஆா். ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.