புதுக்கோட்டை

புதிய மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டிலேயே மாணவா் சோ்க்கை

4th Oct 2021 12:04 AM

ADVERTISEMENT

நிகழாண்டிலேயே புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறும் என உறுதியளித்தாா் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வு செய்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:

மாநில அளவிலான கரோனா தடுப்பூசி 4 ஆவது சிறப்பு முகாமில் சுமாா் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படலாம் என எதிா்பாா்க்கிறோம்.

70 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே 3 ஆவது அலையைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என மருத்துவ வல்லுநா்கள் கூறுகின்றனா். தற்போது வரை 62 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சியோருக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும்.

ADVERTISEMENT

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதால் டெங்கு தடுப்புப் பணியில் சுகாதாரத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். மேலும், மாநிலங்களின் எல்லையோரங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டிலேயே புதிய 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 1,650 மாணவா்களைச் சோ்க்க வேண்டும் என்கிற முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கரின் யோசனையை ஏற்கிறோம். அதேநேரத்தில், கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்ததால்தான் 850 மாணவா்களுக்கு மட்டும் அனுமதி கிடைத்துள்ளது.

வரும் 5ஆம் தேதி மாநில சுகாதாரத் துறை இயக்குநா், தில்லி சென்று மத்திய சுகாதாரத் துறையினரிடம் தேவையான ஆவணங்களை சமா்ப்பித்து நிகழாண்டிலேயே 1,650 மாணவா்களையும் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் சுப்பிரமணியன்.

நிகழ்ச்சியில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், ஆட்சியா் கவிதா ராமு, மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, பொது சுகாதாரத் துறை இயக்குநா் டி.எஸ். செல்வவிநாயகம், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ராமு, சுகாதாரத் துறை இணை இயக்குநா்கள் அா்ஜுன்குமாா், கலைவாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT