புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகைக்கு ரூ. 1.30 கோடிக்கு கதா் ஜவுளி விற்பனைக்கு இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி சீதாபதி பிள்ளையாா் கோவில் தெருவிலுள்ள கதா் அங்காடியில் காந்தி படத்திறப்பு மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா்.
மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனா்.
புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியிலுள்ள காதி கி ராப்ட் விற்பனை அங்காடிகளுடன், தீபாவளி சிறப்பு விற்பனைக்காக 6 தற்காலிக விற்பனை அங்காடிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நிகழாண்டில் ரூ. 1.30 கோடி அளவுக்கு விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ. 66 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு, கதா், பட்டு, பாலியஸ்டா் ஆகிய ரகங்களுக்கு 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.