முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புதுக்கோட்டை மாவட்ட எல்லையான விராலிமலை லஞ்சமேட்டில் அமைச்சர்கள் தலைமையில் திமுகவினர் வரவேற்பளித்தனர்.
முதல்வர் மு க ஸ்டாலின் மதுரை தோப்பூரில் 500 படுக்கை கொண்ட ஆக்ஸிஜன் கரோனா சிகிச்சை மையத்தை இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார். மதுரை மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க, தமிழக அரசு வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கான ஆக்சிஜன் படுக்கை வசதி பற்றாக்குறையை போக்கவும், விரைவில் கரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஆக்சிஜன் படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மதுரை அருகிலுள்ள தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று காலை மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து, அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின், தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட மையத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து திருச்சியில் கரோனா குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கார் மார்க்கமாக விராலிமலை வழியாக திருச்சி சென்றார்.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்ட எல்லையான லஞ்சமேட்டில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆலங்குடி மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் செல்லபாண்டியன், புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, கந்தர்வகோட்டை சின்னதுரை, அறந்தாங்கி ராமச்சந்திரன், மாவட்ட துணை அமைப்பாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.