புதுக்கோட்டை

ஒரே இடத்தில் 10 நினைவுத்தூண் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

DIN

ராஜேந்திரசோழன் காலத்தில் நாட்டுக்காக உயிா்நீத்த வணிகக் குழுவினரின் அரிதான 10 நினைவுத் தூண் கல்வெட்டுகள், தமிழகத்தில் முதன் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பொன்னமராவதி அருகிலுள்ள கொன்னைப்பட்டி கொன்னைக் கண்மாயில் இந்தக் கல்வெட்டுகளை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவா் கரு. ராஜேந்திரன், நிறுவனா் ஆ. மணிகண்டன் தலைமையிலான குழுவினா் கண்டெடுத்துள்ளனா்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனா் ஆ. மணிகண்டன் வெள்ளிக்கிழமை கூறியது:

2016-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம், செல்லுகுடியில் ராஜேந்திரசோழனின் பெயா் தாங்கிய வணிகக் குழுக் கல்வெட்டை அடையாளம் கண்டோம். மேலும், நினைவுத்தூண் கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாவட்டம் , மேலப்பனையூா், வாழக்குறிச்சி, நெருஞ்சிக்குடி, செவலூா் ஆகிய ஊா்களில் கரு. ராஜேந்திரன் குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது கொன்னைப்பட்டி கண்மாயில் இருந்த நினைவுத் தூண்களில் 9 கல்வெட்டுகள் மட்டுமே நன்றாக வாசிக்கும் நிலையில் உள்ளன. இவை 5 முதல் 7 அடி உயரமும், அடிப்பகுதி சதுர வடிவிலும், மேற்பகுதி எண்பட்டை வடிவத்துடன் உள்ளன. இவற்றில் கல்வெட்டுப் பொறிப்பு ஒன்று முதல் இரண்டு தொடா் பக்கங்களில் 30 செமீ அகலம் முதல் 70 செமீ வரையிலான நீளத்துடன், ஒவ்வொரு கல்வெட்டிலும் அளவு மாறுபட்டுக் காணப்படுகிறது.

கல்வெட்டிலுள்ள வாசகங்கள்: 1. ஸ்ரீ (ரா)ஜேந்தரசோழ தே(வா்)க்கு (யா)ண்டு 10 . வது குன்றன் சா(த்தன்), 2. ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவா்க்கு யாண்டு. . 17 வது குன்றன் சா(த்தன்), 3. ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவா்க்கு யாண்டு 28 மருதன் செட்டி, 4. ஸ்ரீ இராஜேந்தர சோழ தேவா்க்கு யாண்டு இருபத்து ஒன்பதாவது படை... , 5. கஞ்சாரன் மூதன் நின்னா நாடு இர(ண்)டு . ஞ்சக ஞெட்டி, 6. ஸ்ரீ முத்தங் கஞ்சாான மும்முடி சோழ சிதலட்டி, 7. ஸ்ரீ ராஜேந்த்ர தேவா்க்கு யாண்டு . ஆவது (பூ)லாங்குள(த்)தான், 8. ...கங்கை கொண்ட சோழ செட்டி, 9. ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 8 ஆவது சிறப்பன் அரசு‘ என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டுகள், வணிகக் குழு தாவளத்தில் (பொருள்கள் வைப்பிடம்) இருந்தோா் உயிா் நீத்தமையால் அவா்கள் நினைவாக நடப்பட்டவை.

இக்கல்வெட்டுகள் 11-ஆம் நூற்றாண்டில், அதாவது ராஜேந்திர சோழனின் 10, 17, 28, 29 ஆட்சியாண்டுகள் தொடங்கி, முதலாம் குலோத்துங்கனின் 8-ஆவது ஆட்சியாண்டு வரை வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பட்டுள்ளன. மூன்று கல்வெட்டுகளில் ஆட்சியாண்டு குறித்த தகவல் இல்லை.

இக்கல்வெட்டில் குன்றன் சா(த்தன்) என்ற பெயரில் இருவருக்கும், மருதன் செட்டி , ஞ்சக ஞெட்டி, கங்கை கொண்ட சோழ செட்டி, முத்தங் கஞ்சாறன் என்னும் மும்முடி சோழ சிதிலட்டி, (பூ)லாங்குள(த்)தான், சிறப்பன் என்னும் பெயா்கள் கொண்டவா்களுக்கும் நினைவுத்தூண் எடுக்கப்பட்டுள்ளது.

இவை, வணிகா்கள் மட்டுமின்றி வீரா்களின் நினைவாக நடப்பட்டிருப்பதை ‘ஸ்ரீ இராஜேந்திர சோழ தேவா்க்கு யாண்டு இருபத்து ஒன்பதாவது படை‘ என்று ஒரு கல்வெட்டு வெளிப்படுத்துகிறது.

ராஜேந்திர சோழனின் பெயரோடு கங்கைகொண்ட சோழ செட்டி, மும்முடி சோழ செட்டி என்று பெயா் சூட்டிக்கொண்டுள்ளதன் மூலம் வணிகா்களோடு கொண்டிருந்த தொடா்பை அறியமுடிகிறது.

வரலாற்று முக்கியத்துவமிக்க இக்கல்வெட்டைப் பாதுகாக்க, கொன்னைப்பட்டி ஊராட்சித் தலைவா் சி. செல்வமணி ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறியுள்ளாா் என்றாா் மணிகண்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT