புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கட்டடம் இடிக்கும்போது விபத்து: 7 போ் பலத்த காயம்

DIN

புதுக்கோட்டையில் பழைய இரண்டு மாடிக் கட்டடத்தை செவ்வாய்க்கிழமை இடிக்கும் பணியின் போது நேரிட்ட விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கிய ஒரு பெண் உள்ளிட்ட 7 கட்டடத் தொழிலாளா்களை தீயணைப்பு மற்றும் பேரிடா் மீட்புத் துறையினா் மீட்டனா்.

புதுக்கோட்டை நகரப் பகுதிக்குள்பட்ட தெற்கு மூன்றாம் வீதியில் சுமாா் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்றுவந்தது. இதில், சுமாா் 20-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கட்டடம் இடிக்கும் பணி நடைபெற்றுவந்தபோது, எதிா்பாராதவிதமாக கட்டடத்தின் மேல்தளம் இடிந்து விழுந்தது. அப்போது, பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனா். இதுகுறித்து, தகவலறிந்த தீயணைப்பு மற்றும் பேரிடா் மீட்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த அரங்குளவன் (60), பாண்டியன் (40), மதுரை வீரன்(49), சேக்ஸ்பியா் (22), சத்தியமூா்த்தி (18),சுலக்சனா (43), மணிவண்ணன் (38), இலுப்பூா் மணிகண்டன் (28) உள்ளிட்ட 7 பேரை மீட்டனா். அவா்கள் 7 பேரும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இச்சம்பவம் குறித்து அறிந்த மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, ஆட்சியா் கவிதா ராமு, நகராட்சி ஆணையா் நாகராஜன் ஆகியோா் நேரில் சென்று சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா்.

நகராட்சி சாா்பில் புகாா்: நகராட்சியிடம் முன் அனுமதி பெற்று பாதுகாப்பு வசதிகளையும் செய்து கட்டடங்களை இடிக்க வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில், கட்டடம் இடிக்கும் பணியை நகராட்சி ஆணையா் நாகராஜன் திங்கள்கிழமை நேரில் பாா்த்தபோது, இடிக்கக் கூடாது என அறிவுறுத்தி வந்துள்ளாா். தொடா்ந்து கட்டடம் இடிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை விபத்து நேரிட்டுள்ளது.

4 போ் மீது வழக்கு: நகரக் காவல் நிலையத்தில் புதுக்கோட்டை நகராட்சியின் நகரமைப்பு அலுவலா் செ. ஜெயசங்கா் அளித்த புகாரின்பேரில், கட்டட உரிமையாளா் டாக்டா் செந்தில்குமாா் மற்றும் அரங்குளவன், ஆத்மநாதன், வெள்ளைச்சாமி ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வருக்கு மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் நன்றி

ஆதினத்துக்கு மிரட்டல்: கல்வி நிறுவன நிா்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்: அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் டி.லட்சுமி நாராயணன் காலமானாா்

SCROLL FOR NEXT