புதுக்கோட்டை

தடை அல்ல; நோட்டீஸ்தான்: பி.எட். மாணவர் சேர்க்கை பற்றிப் புதுகை கல்லூரி முதல்வர் விளக்கம்

17th Sep 2020 12:23 PM

ADVERTISEMENT

கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதால் நிகழாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் செய்தி உண்மையல்ல என புதுக்கோட்டை கல்லூரி முதல்வர் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து புதுக்கோட்டை அரசுக் கல்வியியல் கல்லூரி முதல்வர் குணசேகரன் கூறியது: தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை உள்ளிட்ட 3 அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் நிகழாண்டுக்கான மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தவறு. 

100 மாணவர்களுக்கு (பிஎட்) 16 ஆசிரியர்களும், எம்எட் கல்விக்கு 10 ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வைத்துள்ளது. இதன்படி ஆசிரியர் பற்றாக்குறையாக உள்ள சென்னை, குமாரபாளையம், புதுக்கோட்டை ஆகிய மூன்று அரசுக் கல்வியியல் கல்லூரிகளுக்கு 90 நாள்களுக்குள் பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதன்பிறகுதான் சேர்க்கை நிறுத்தம் போன்ற நடவடிக்கைகள் இருக்கும். அதுவே கூட தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் தான் மேற்கொள்ளும். தற்போதைய நிலவரப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் நியமனத்துக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு கரோனா முடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

3 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை

இதற்கிடையே அரசுக் கலைக் கல்லூரிகளிலுள்ள ஆசிரியர்களை கல்வியியல் கல்லூரிகளில் நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. தற்போதைக்கு மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகுதான் புதிய மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பே வெளியாகும்.

எனவே இப்போதே மாணவர் சேர்க்கைக்கான தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மையல்ல என்றார் முதல்வர் குணசேகரன்.

Tags : pudhukottai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT