புதுக்கோட்டை

200 ஆண்டுகள் பழைமையான புறாக்கள் சரணாலயம்: பின்பற்றத்தக்க பறவைநேய மாதிரி!

14th Oct 2020 03:48 AM | சா.ஜெயப்பிரகாஷ்

ADVERTISEMENT

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக பல இடங்களிலும் இந்த மாதிரிகளை அமைக்கலாம் என்ற அளவுக்கான பின்பற்றத்தக்க மாதிரியான 200 ஆண்டுகள் பழைமையான புறாக்கள் சரணாலயம், அதன் அருமையைப் புரிந்து கொள்ளாததால் சிதிலமடைந்து வருகிறது.
 நெருக்கடியான குடும்பச் சூழலில் பக்கத்து வீட்டில் கடன் வாங்கி வைத்த நெல்லையும் குருவிகளுக்குத் தீனியாகப் போட்ட சுப்பிரமணிய பாரதியார் உள்பட,  விவசாய நிலத்தில் பறவைகளுக்காக ஒரு பகுதியை விட்டு வைக்கும் இயல்பான பறவை நேயப் பண்பு கொண்டது தமிழ்ச் சமூகம். 
பறவைகள் உண்டு எச்சமாக வெளியேற்றியதில் இருந்து முளைத்து செழித்து வளர்ந்தவைதான் இப்போது நாம் சரளமாக வெட்டித் தள்ளும் அடர் காடுகள். ஒரு பறவை இனம் அழிந்தால், ஓரிரு வகையான செடி, கொடியினம் அழியும் என்பது சூழலியலாளர்களின் நீண்ட கால எச்சரிக்கை.
இந்தச் சூழலில்தான் புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு அருகே சிதிலமடைந்து வரும் புறாக்கள் சரணாலயத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. புதுக்கோட்டை நகரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது சேந்தமங்கலம் கிராமம்.
சேந்தமங்கலம் சாலையின் வலப்புறத்தில் கேட்பாரற்றுக் காணப்படும் இந்தக் கட்டடம்தான் சுமார் 200 ஆண்டுகள் பழைமையான புறாக்கள் சரணாலயம். 4 புறமும், தலா 7 அடுக்குகளில் ஒவ்வொன்றிலும் சுமார் 7 துளைகளுடன் அழகாகக் கட்டப்பட்டிருக்கிறது. கட்டுமானத்துக்கு செங்கல், சுண்ணாம்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்தப் பழைமையான கட்டடம் எப்போது எதற்காகக் கட்டப்பட்டது என்பதற்கான அதிகாரபூர்வ அரசு ஆவணம் எதுவுமில்லை. 
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மூத்தவர்கள் இதனைப் புறாக்கள் சரணாலயம் என்றழைக்கிறார்கள். இதற்குப் பக்கத்திலேயே சுமார் 10 ஏக்கர் நிலத்தையும் நெல் போன்ற தானியங்களை விளைவித்துவிட்டு அறுவடை செய்யாமல் விட்டுவிடுவார்களாம். புறாக்கள் அவற்றை உண்டுவிட்டு இந்தச் சரணாலயத்தில் தங்கிக் கொள்ளும் என செவிவழிச் செய்தி உள்ளது.
இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர் பேராசிரியர் சு. மதியழகன் கூறியது:
1815}இல் கிழக்கிந்திய கம்பெனியாரின் மேனுவல் வெளியானது. ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை ஏக்கரில் என்ன பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பது வரை நுணுக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தில் இந்தக் கட்டடம் தொடர்பான குறிப்புகள் எதுவுமில்லை.
அப்படியானால், அதற்குப் பிறகு கட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். அதேநேரத்தில் அதற்குப் பிறகும்கூட அதிகாரப்பூர்வ ஆவணமும் அரசு நிர்வாகத்தால் தயாரிக்கப்படவில்லை. புறாக்கள் உண்டு வாழ்வதற்கான இடமாக இருந்திருக்கிறது என்பது அந்தக் கிராம மக்களின் கருத்து. தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் இதுபோன்ற மாதிரிகள் அரிதாகக் காண முடிகிறது என்கிறார் மதியழகன்.
சுமார் 200 ஆண்டுகள் பழைமையான அரிதான ஒரு மாதிரியை, மாவட்ட நிர்வாகம் முதலில் அடையாளப்படுத்தி, ஆவணப்படுத்தி, தொடர்ந்து சிதிலமடையாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, பறவைகளைப் பாதுகாக்க இதேபோன்ற மாதிரிகளை வாய்ப்புள்ள இடங்களில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறை மற்றும் வேளாண்மைத் துறையின் மூலம் அரசு மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT