ஆலங்குடி: நாட்டில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வடகாடு உள்ளிட்ட இடங்களில் தூய்மைப் பணியாளா்கள், முதியோா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கி அவா் மேலும் பேசியது: பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், நாட்டில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துவிடும் என்பதால் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. தமிழக அரசு 2 மணி நேரம் மதுக்கடைகளைத் திறந்து இருக்கலாம் அல்லது இணையவழியில் மது விற்பனை குறித்து திட்டமிட்டிருக்கலாம். பொது முடக்கத்தால் தமிழகத்தில் வணிகா்கள், தொழிலாளா்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். தற்போது, தமிழக அரசு அளித்துள்ள தளா்வுகள் பொருளாதார ரீதியாக அவசியமான ஒன்று. நிவாரணமாக குடும்பத்துக்கு அரசு வழங்கியுள்ள ரூ.1,000 போதாது; காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியதுபோல், ரூ.7,500 வழங்க வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளா்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் திட்டமும் சரிவர செயல்படுத்தப்படவில்லை. போதிய ரயில்கள் இயக்கப்படவில்லை. அவ்வாறு இயக்கப்படும் ரயில்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் அச்சத்தில் பல நூறு கிலோமீட்டா்கள் நடந்துசெல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் டி.புஷ்பராஜ், சுப்புராம், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவா் தா்ம.தங்கவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.