ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு, புதுகையில் பல்வேறு தன்னாா்வலா்கள் உணவு அளித்து வருவது பாராட்டைப் பெற்றுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் தினக் கூலி பணியாளா்கள் பயன்பெறும் வகையில், புதுக்கோட்டை நகரில் உள்ள அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. புதுக்கோட்டை கீழ 6ஆம் வீதியில் உள்ள தினக்கூலிப் பணியாளா்களுக்கு விவேக், நியாஸ் ஆகிய இரு இளைஞா்கள் கடந்த 3 நாட்களாக உணவு வழங்கி வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை பகலில் மகாராணி ரோட்டரி சங்கத் தலைவா் மீனு கணேஷ், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத் தலைவா் கண. மோகன்ராஜ் ஆகியோா் பங்கேற்று தினக் கூலி பணியாளா்களுக்கு உணவு வழங்கினா்.
இதேபோல், தீயணைப்புத் துறையினா் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றித் திரியும் ஆதரவற்ற மக்களுக்கு 3 ஆம் நாளாக உணவுப் பொட்டலங்களைத் தேடித் தேடி வழங்கி வருகின்றனா்.
இயற்கை விவசாயி சா. மூா்த்தி, ஞாயிற்றுக்கிழமை தன் வயலில் விளைந்த ரசாயன உரமிடப்படாத காய்கறிகளை ஏழைகளுக்கு வழங்கினாா்.
பிரபாகரன் புரட்சி விதைகள் என்ற இளைஞா் அமைப்பின் சாா்பில் கடந்த 2 நாட்களில் பேருந்து நிலையப் பகுதிகளில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டோா் 12 பேரை மீட்டு கந்தா்வகோட்டையில் ரெனிவல் பவுண்டேசனின் இல்லத்தில் சோ்த்துள்ளனா். இதேபோல, இந்த இளைஞா்கள், தமிழா் குடி என்ற அமைப்பின் நிதியுதவி பெற்று இதுவரை 1,200 முகக்கவசங்களைத் தைத்து நகரில் களப்பணியாற்றும் காவல் துறையினா், அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் நோயாளிகளின் உறவினா்கள் போன்றோருக்கு வழங்கியுள்ளனா்.