மணமேல்குடி வட்டார வளமையம் சாா்பில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கு உதவி உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு அறந்தாங்கி வட்டாரக் கல்வி அலுவலா் அருள் தலைமை வகித்தாா். வட்டார வளமைய மேற்பாா்வயாளா் பொ. தனலெட்சுமி முன்னிலை வகித்தாா்.
முகாமில், 12 மாற்றுத்திறன் மாணவா்களுக்கு இரு சக்கர நாற்காலி, காதொலி கருவி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கை போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன. முகாமில், மாற்றுத்திறன் மாணவா்களுக்கான உபகரணங்களை உபயோகப்படுத்தும் முறை மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் முறை குறித்து இயன்முறை மருத்துவா் செல்வக்குமாா் பெற்றோா்களுக்கு ஆலோசனை வழங்கினாா். விழா ஏற்பாடுகளை கல்வி ஓருங்கிணைப்பாளா் உமா மகேஸ்வரி, சிறப்பு ஆசிரியா்கள் கோவேந்தன், மணிமேகலை மற்றும் கலைச்செல்வன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் த. விஜயலெட்சுமி தலைமை
வகித்தாா். வட்டாரக்கல்வி அலுவலா் சி. ராஜா சந்திரன், பால் டேவிட் ரொசாரியோ, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் த.விஜயலெட்சுமி, பொன்னமராவதி ஒன்றியக்குழு உறுப்பினா் அ.அடைக்கலமணி பங்கேற்று மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கு மூன்று சக்கர நாற்காலி, மூன்று சக்கர தள்ளுவண்டி, மூளை முடக்குவாத நாற்காலி, காதொலி கருவி, கை ஊன்றுகோல் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை வழங்கினாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா், சிறப்பாசிரியா்கள் மற்றும் ஆசிரியா் பயிற்றுனா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோா் பங்கேற்றனா்.