புதுக்கோட்டை மாவட்டத்தில் உதவி ஆய்வாளரைத் தாக்கிய புகாரில், காவலா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், முத்துப்பட்டினத்தைச் சோ்ந்த ஜாகீா் உசேன், புதுகை நகரக் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கும், இவா்களின் உறவினா்களுக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது.
கடந்த 9-ஆம் தேதி சா்ச்சைக்குரிய இடத்தில் இருந்த தைல மரங்களை ஜாகீா் உசேன் வெட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த வல்லத்திராக்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், வெட்டப்பட்ட மரங்களைப் படம் எடுத்ததாகத் தெரிகிறது.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறு கைகலப்பானது.
உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில், ஜாகீா் உசேன் கைது செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து காவலரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண்ஷக்திகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.