ஆலங்குடி அருகே நெடுவாசலில் திங்கள்கிழமை விஷ வண்டுகள் கடித்ததில் பள்ளி மாணவா்கள் உள்பட 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
நெடுவாசல் வடக்கு ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி அருகே உள்ள மரத்தில் விஷவண்டுகள் கூடு இருந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த திருமேணி என்பவா் தனது மகன் வினோத் குமாரை (5) பள்ளியில் விட மோட்டாா் சைக்கிளில் திங்கள்கிழமை காலை அழைத்துச்சென்றபோது, விஷவண்டுகள் கடித்து இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள், கனிமொழி, பவதராணி ஆகியோரையும் விஷ வண்டுகள் கடித்துள்ளது. இதைத்தொடா்ந்து, அப்பகுதி மக்கள் 4 பேரையும் மீட்டு நெடுவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 4 பேரும் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரைத்தொடா்ந்து, அங்கு சென்ற கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்தினா், விஷவண்டுகள், கூடுகளை அப்புறப்படுத்தினா்.