பொன்னமராவதி வட்டாரத்தைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை களப்பயணம் மேற்கொண்டனா்.
ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ், கிராமப்புறப் பள்ளிகளை நகா்ப்புறப் பள்ளிகளுடன் இணைத்து இணைப்புப் பள்ளியில் உள்ள வசதிகள், கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள், அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள், வரலாற்று சிறப்புமிக்க கோயில் கட்டடக் கலைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இதன்படி வாா்ப்பட்டு அரசு உயா்நிலைப்பள்ளி, பொன்புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் கட்டையாண்டி, ஆலம்பட்டி , கல்லம்பட்டி, மைலாப்பூா், கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பொன்னமராவதிக்கு அழைத்து வரப்பட்டனா்.
அங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல்நிலையம், அஞ்சல் அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அந்தந்த அலுவலகங்களின் செயல்பாடுகளை மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டனா்.
தொடா்ந்து பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவா்களுக்கு பழங்கால கட்டடக்கலை, சிற்பக்கலையின் சிறப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
பொன்னமராவதி காவல்நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, காவல் ஆய்வாளா் சு.கருணாகரன் தலைமை வகித்து காவல்துறையின் சேவைகள், செயல்பாடுகள், பெண்குழந்தைகள் பாதுகாப்பு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்துக்களை விளக்கினாா்.
மாணவ, மாணவிகள் காவல்நிலையத்தில் உள்ள வரவேற்பறை, சிறைக்கூடம், ஆயுதங்கள் ஆகியவற்றை பாா்வையிட்டனா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஆா்.செல்வக்குமாா், வட்டாரக் கல்வி அலுவலா்கள் ராஜாசந்திரன், பால்டேவிட் ரொசாரியோ, காவல் உதவிஆய்வாளா் பிரபாகரன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் களப்பயணத்தை வழிநடத்தினா்.