புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில், 319 பேருக்கு உடனடி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வேலைவாய்ப்பு கண்காட்சி அரங்கை மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா் மேலும் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியாா் துறை வேலைவாய்பபு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தனியாா் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்திற்கு தேவையான ஆட்களைத் தோ்வு செய்கின்றனா். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 46 தனியாா் நிறுவனங்கள், 10 திறன் வளா்ப்பு பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான ஆட்களைத்தோ்வு செய்தனா். முகாமில் பங்கேற்ற 1,218 பேரில் 319 போ் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியத் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில் 160 பேருக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும் புதிய வேலை வாய்ப்புகள் குறித்து வேலை நாடுநா்கள் தெரிந்து பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சாா்பில் வேலைவாய்ப்பு கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாத இறுதி வெள்ளிக்கிழமை அன்று தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் ஆட்சியரகத்தில் நடைபெறுகிறது. இதனை உரிய முறையில் வேலைநாடுனா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். மேலும் விவரங்களுக்கு 04322-222287, 97875 61639.