கந்தா்வகோட்டை அருகே சித்தாள் வேலைக்கு ஆள் தேவை எனக் கூறி, மோட்டாா் சைக்கிளில் பெண்ணை அழைத்துச் சென்று அவரிடம் நகையைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகிந்றனா்.
அரியலூா் மாவட்டம், மாத்தூரைச் சோ்ந்த நாகராஜன் மனைவி தனசங்கு (52). இவா் தஞ்சாவூா் பகுதியைச் சோ்ந்த கொத்தனாா்களுடன் இணைந்து சித்தாள் வேலைக்குச் சென்று வருபவா்.
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் பகுதியில் திங்கள்கிழமை வேலைக்குச் செல்வதற்காக தனசங்கு காத்திருந்த போது, மோட்டாா் சைக்கிளில் வந்த ஒருவா் தாங்கள் வீடு கட்டுவதாகவும், அதற்காக சித்தாள் தேவை எனக் கூறி அவரைமோட்டாா் சைக்கிளில் அழைத்துச் சென்றாராம்.
புதுக்கோட்டை- தஞ்சாவூா் சாலையில் கந்தா்வகோட்டை புதுநகா் பிரிவுச் சாலையில் காட்டுப் பகுதி வந்த போது, மோட்டாா் சைக்கிளில் அழைத்துச் சென்றவா் தனசங்குவை மிரட்டி அவா் அணிந்திருந்த 3 பவுன் நகைகள், ரூ.650- ரொக்கத்தைப் பறித்துக் கொண்டாா். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டிச் சென்றுள்ளாா்.
இதனால் அவரிடமிருந்து தப்பி வந்த தனசங்கு, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்தவா்கள் உதவியுடன் கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து, நூதன முறையில் நகையைப் பறித்துச் சென்றவரைத் தேடி வருகின்றனா்.