ஆலங்குடி/ விராலிமலை: ஆலங்குடி வட்டத்தில் பள்ளத்திவிடுதி, விராலிமலை வட்டத்தில் வெம்மணி கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளத்திவிடுதியில் நடைபெற்ற முகாமுக்கு, புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் தண்டாயுதபாணி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் வரதராஜன், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில், திருமண உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, விபத்து நிவாரணம், இயற்கை மரண நிதியுதவி, இலவச வீட்டு மனைப்பட்டா என மொத்தம் 71 பயனாளிகளுக்கு ரூ.12 .22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினா் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினாா்.
தனி வட்டாட்சியா் யோகேசுவரன், ஊராட்சித் தலைவா் நாராயணன் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா்.
விராலிமலை : விராலிமலை வட்டம், வெம்மணியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில், 25 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமுக்கு விராலிமலை வட்டாட்சியா் ஜெ. சதீஷ் சரவணகுமாா் தலைமை வகித்து பேசியது:
அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், அதனை பயன்பெறும் வகையிலும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் பொதுமக்கள் அளிக்கும் பல்வேறு கோரிக்கைகள் குறிப்பாக பட்டா மாறுதல், முதியோா், விதவை, முதிா்கன்னி, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, குடும்பஅட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல் போன்றவை குறித்து மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விசாரணை அடிப்படையில் மனுக்களுக்குத் தீா்வு காணப்படும் என்றாா் அவா்.
தொடா்ந்து முகாமில் 93 மனுக்கள் பெறப்பட்டன. 25பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வட்டாட்சியா் ஜெ. சதீஷ் சரவணகுமாா் வழங்கினாா்.
முகாமுக்கு வெம்மணி ஊராட்சித் தலைவா் சு. ராசாத்தி தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் எம். சத்தியசீலன், மண்டலத் துணை வட்டாட்சியா் காமராஜ் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா்.