புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வனப்பரப்பை பராமரித்து, வன விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் ஆட்சியா் பி. உமாமகேஸ்வரியிடம் , தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். நியாஸ் அகமது மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு:
புதுக்கோட்டை சுற்றியுள்ள வனக்காடுகளை அழித்துவிட்டு, தைலமரங்களை வனத்துறையினா் வளா்த்துள்ளனா். இந்த தைல மரக்காட்டுக்குள் இருந்த பாம்புகள், குரங்கு, மயில், மான் மற்றும் பல வன விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி, சாலைகளிலுள்ள மரங்களில் வசித்து வருகின்றன.
கஜா புயல் தாக்கியபோது அதிக அளவில் மரங்களும் சாய்ந்தன. தற்போது குரங்குகள் இருக்க இடம் இல்லாமல் சாலையில் சுற்றித்திரிவதால், வாகனங்களில் அடிபட்டு இறந்து வருகின்றன.
சில குரங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன. எனவே வனவிலங்குகளைப் பாதுகாக்கும் வகையில், புதுக்கோட்டை பல வகையான கனிகளைத் தரக்கூடிய மரங்களை உருவாக்கி வனவிலங்கு சரணாலயம் அமைக்க வேண்டும்.
372 மனுக்கள்: கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 372 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். காளிதாசன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.