புதுக்கோட்டை

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்

13th Feb 2020 08:36 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அரசின் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.50 ஆயிரதத்திலிருந்து ரூ.72 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200, 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை  வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து  5 ஆண்டுகளுக்கு மேல்  காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடா்ந்து பதிவைப் புதுப்பித்து இருக்க வேண்டும்.  ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. ஏற்கெனவே உதவித்தொகை பெற்றவா்கள் வரத்தேவையில்லை.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பில்  தோ்ச்சி மற்றும் அதற்கும் கீழ் படித்தவா்களுக்கு மாதம் ரூ.600,  பிளஸ்2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.750, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வீதம் 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவுபெற்றிருந்தால் போதும்.

 இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதிகள் உள்ளவா்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகை பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. அதேபோல, வேலைவாய்ப்புக்கு பரிந்துரைத்தலுக்கும் எவ்விதத் தடையும் ஏற்படாது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT