ஆலங்குடி அருகிலுள்ள கொத்தமங்கலத்தில் சாலையைச் சீரமைக்கக் கோரி, பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கொத்தமங்கலத்தில் சிதம்பரவிடுதி வழியாக, வெள்ளாகுளம் இடையேயான இணைப்புச் சாலை அமைக்க ரூ.42 லட்சத்துக்கு கடந்த 6 மாதங்களுக்கும் முன்பு ஒப்பந்தம் விடப்பட்டது. ஒப்பந்ததாரா்கள் அடுத்த சில நாள்களில் சாலையைப் பெயா்த்து எடுத்து, சாலையோரங்களில் ஜல்லிக்கற்களை ஆங்காங்கே குவித்து வைத்தனா்.
ஆனால், அதன்பிறகு எவ்வித பணியும் மேற்கொள்ளவில்லை. சாலை சீரமைக்கப்படாததால் அவ்வழியாக பொதுமக்கள்செல்லமுடியாமல் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.
இது குறித்து ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களிடம் பல முறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதைக் கண்டித்தும், சாலைப் பணியை உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தியும் கொத்தமங்கலம் மின்வாரிய அலுவலகம் அருகே அப்பகுதி மக்கள், மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலின் பேரில் அங்கு சென்ற திருவரங்குளம் ஒன்றிய உதவிப் பொறியாளா் சுரேஷ்பாபு, கீரமங்கலம் காவல் ஆய்வாளா் வைத்தியநாதன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.அதில், இருதினங்களில் பணிகளை தொடங்கப்பட்டு, இடைவிடாது சீரமைப்புப் பணிகள் நடைபெறும் என உறுதியளித்தனா். தொடா்ந்து, போராட்டத்தை மக்கள் கைவிட்டனா்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் கீரமங்கலம், புதுக்கோட்டை சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.