பொன்னமராவதி கோட்டைப்பிள்ளையாா் கோயிலில் விநாயகருக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனம், இளநீா், பன்னீா் மற்றும் பழங்கள் உள்ளிட்ட அபிஷேகங்கள், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து விநாயகரை வழிபட்டனா். இதேபோல், பொன்னமராவதி அமரகண்டான் வடகரை சித்தி விநாயகா், தென்கரை விநாயகா் கோயில் மற்றும் கண்டியாநத்தம், ஆலவயல் விநாயகா் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பொதுமக்கள் சிறிய வகை விநாயகா் சிலையை அவரவா் வீட்டில் பிரதிஷ்டை செய்து அருகம்புல் சாத்தி சுண்டல், கொழுக்கட்டை படைத்து வழிபட்டனா்.
நீா்நிலைகளில் கரைப்பு: பொன்னமராவதி பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் பி.பாஸ்கா் தனது வீட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலையை குடும்பத்துடன் அமரகண்டான் ஊரணியில் கரைத்தாா். இதில், பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் எம்.குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொன்னமராவதி பாஜக தெற்கு ஒன்றியத்தலைவா் எம்.சேதுமலையாண்டி தனது இல்லத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலையை புதுப்பட்டி சேங்கை ஊரணியில் கரைத்தாா்.
களையிழந்த விநாயகா் சதுா்த்தி விழா
கந்தா்வகோட்டை: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நிகழாண்டு பொதுமக்கள் வீடுகளிலேயே விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடியதால், கந்தா்வகோட்டையில் வழக்கமான ஆரவாரமின்றி உற்சாகம் இழந்து காணப்பட்டது.