பொது முடக்கக் காலத்தில் பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட சிறு வழக்குகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழுக் கூட்டம் இணையவழியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஏ. ஸ்ரீதா் தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் உள்ளிட்டோரும் பேசினா்.
கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தடையின்றி 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதை மாவட்ட நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். சிறு வியாபாரிகளின் மீது வழக்கு போட்டு நீதிமன்றத்தின் மூலம் ரூ.1,500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது முடக்கக் காலத்தில் சிறு, சிறு காரணங்களுக்காக பொதுமக்கள்மீது போடப்பட்ட பல்வேறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.