புதுக்கோட்டை

விதிகளை மீறி விளம்பரப் பதாகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்

22nd Sep 2019 03:40 AM

ADVERTISEMENT


 உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அனுமதியின்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் விளம்பரப் பலகைகள், பதாகைகள் வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பி .உமாமகேஸ்வரி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது சென்னை உயர்நீதிமன்ற வழக்குகளின் வழிகாட்டுதலின்படி அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பதாகைகள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விளம்பரப் பலகைகள், பதாகைகள் நிறுவ அனுமதி விதிகள்- 2011 மற்றும் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம்- 1920-இன்படி, கல்வி நிறுவனங்கள் முன்பு, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு கொண்ட மருத்துவமனைகள் முன்பு, சாலை அல்லது தெரு சந்திப்புகளின் மூலைகளில், சந்தியின் இருபுறமும் 100மீட்டர் தூரத்திற்குள் மற்றும் சிலைகள் அல்லது நினைவுச் சின்னங்கள் முன்பாகவும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் விளம்பரப் பதாகைகள், பலகைகள், அட்டைகள் எதையும் வைக்கக் கூடாது.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் விதிகளுக்குட்பட்ட அளவுகளில் மட்டுமே விளம்பரப் பலகைகள், பதாகைகள் அமைக்க வேண்டும். மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள், பதாகைகள், அட்டைகளை உரிய அலுவலர்கள் அகற்றி அதற்கான தொகை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கப்படும்.
உரிய அலுவலரிடமிருந்து அனுமதி பெறாமல் விளம்பரப் பலகைகள், பதாகைகள்,  அட்டைகள் வைக்கும் நபர்கள் மீது ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT