அன்னவாசல் பேரூராட்சிக்கு உள்பட்ட கடைவீதி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக ஆக்கிரமித்து இருந்த கடைகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
இந்த வீதிகளில் தற்போது தார்சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பு காரணமாக மழை நீர் செல்ல முடியாமலும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் இருந்தது.
அதனைத் தொடர்ந்து பேரூராட்சி அதிகாரிகள் கடைவீதி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை கண்டறிந்து அவற்றை உடனே அகற்றும்படி தெரிவித்தனர். பின்னர் ஒலிபெருக்கி மூலம் விளம்பரமும் செய்தனர். இதேபோல், கடைவீதி சாலையில் ஆக்கிரமிப்புகள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர்.
இந்நிலையில் அதிகாரிகள் வழங்கிய காலக்கெடு முடிவடைந்த பிறகும் கடைவீதி சாலையில் ஆக்கிரமிப்பு தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் ஆசாராணி தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன், பேரூராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை திங்கள்கிழமை அகற்றினர்.