புதுக்கோட்டை

பொன்னமராவதியை நகராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும்

10th Sep 2019 09:59 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம்.
பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிதியளிப்புப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
குஜராத் கலவர வழக்கில் அமித்ஷாவை கைது செய்து சிறையில் அடைத்தார் என்ற காரணத்துக்காகவே, ப.சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளனர்.
கொள்கையளவில் நாங்கள் ப.சிதம்பரத்திடமிருந்து வேறுபட்டாலும், அவரை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசின் பயங்கரவாத தடுப்புசட்டம்  சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் சட்டமாக உள்ளது. பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாகக் தரம் உயர்த்தவேண்டும். தரம் உயர்த்தப்பட்ட  பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை செய்துதர வேண்டும். பொன்னமராவதி ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் குளங்கள், வரத்துவாரிகளைத் தூய்மை செய்யவேண்டும்  என்றார்.
தொடர்ந்து பொன்னமராவதி ஒன்றியக்குழு சார்பில்,  கட்சி நிதியாக ரூ.1.50 லட்சம் மதுக்கூர் ராமலிங்கத்திடம் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் என்.பக்ரூதீன் தலைமைவகித்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் சி.ஜீவானந்தம்  முன்னிலை வகித்தனர்.
ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பி.ராமசாமி, கே. குமார், சிங்காரம், பிச்சையம்மாள். சாத்தையா, மாயழகு, நல்லதம்பி, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலர் அ.தீன், கிளை நிர்வாகிகள் நாகராஜன், மணிமாறன், சண்முகம் வெள்ளத்துரை உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT