புதுக்கோட்டை

ஜல்சக்தி அபியான் சார்பில்  நீர் மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு

4th Sep 2019 08:50 AM

ADVERTISEMENT

கீரமங்கலத்தில் நீர் ஆற்றல் சேமிப்பு இயக்கம் (ஜல்சக்தி அபியான்) சார்பில் நிலத்தடி நீர் பாதுகாப்பு, நீர் மேலாண்மை  குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையம், நீர் ஆற்றல் சேமிப்பு இயக்கம் (ஜல்கச்தி அபியான்) சார்பில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பது மற்றும் நீர்மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி  நடைபெற்றது. 
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் (ஆடுதுறை) வெ.அம்பேத்கர் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மு.சுப்பையா முன்னிலை வகித்தார். இதில், 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், வெ.அம்பேத்கர் பேசியது: நாடு முழுவதும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கத்தில் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது. மழை நீரை சேமிப்பது, நீர்நிலைகளில் தண்ணீரை சேமிப்பது, முகத் துவாரங்களில் தண்ணீரை சேமிப்பது, கிணறு மற்றும் பயன்படாத ஆழ்துளை கிணறுகளில் மழை நீரை சேமிக்க வழிவகை செய்வது, மரம் நடுவது உள்ளிட்ட வழிமுறைகளின் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் உயிர்சக்தித் துறை தலைவர் சு. புகழேந்தி, நபார்டு வங்கி வளர்ச்சி அலுவலர் எஸ். ஜெயஸ்ரீ, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் எஸ். அருணாசலம், எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட இயக்குநர் ஆர். ராஜ்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர்.முன்னதாக வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் மு.ரா. லதா வரவேற்றார். முடிவில் உழவியல் துறை உதவிப் பேராசிரியர் ஞா. பிரபுகுமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை சார்பில் 10க்கும்  மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, மழைநீரை சேமிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்கள் குறித்த கருவிகளை காட்சிப்படுத்தி விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT