புதுக்கோட்டை

சாலை பணியை விரைவுபடுத்தக் கோரி மறியல்

4th Sep 2019 08:51 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டையிலிருந்து மணிப்பள்ளம் செல்லும் சாலையை சீரமைக்கும் பணியை விரைவுபடுத்தக் கோரி போஸ்நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை காலை திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
புதுக்கோட்டையிலிருந்து போஸ் நகர் வழியாக மணிப்பள்ளம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிக மோசமாக சேதமடைந்துள்ளது. இச்சாலையை சீரமைக்கக் கோரி அண்மையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறையினர் புதிய சாலை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கினர். ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்ட நிலையில் இப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து போஸ் நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலர் துரை நாராயணன் தலைமை வகித்தார். நகரச் செயலர் எஸ். பாபு, பொருளாளர் டேவிட், துணைச் செயலர் ஜெகன் உள்ளிட்டோரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். தகவலறிந்து வந்த போலீஸார் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து வருவாய்க் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் சரவணன் முன்னிலை வகித்தார். வெள்ளிக்கிழமை முதல் சாலைப் பணிகளைத் தொடங்கி விரைவில் முடிக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டதாக வாலிபர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT