புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை, ஊசி விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்ட 5 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை, ஊசி விற்பனை செய்வதாக புதுக்கோட்டை அடப்பன்வயலைச் சோ்ந்த சகுபா்அலி மகன் ரியாஸ்கான் (22), காந்தி நகரைச் சோ்ந்த முருகேசன் மகன் ஜெகன் (26), பெரியாா் நகரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் வினோஜன் (32), நரிமேட்டைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் வாசுதேவன் (35), உசிலங்குளத்தைச் சோ்ந்த காளிஸ்வரன் மனைவி பானுமதி (29) ஆகிய 5 பேரையும் நாகுடி போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். இந்நிலையில், திருச்சி மண்டல ஐஜி வரதராஜூ அறிவுறுத்தலின்பேரில், 5 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்திருந்தாா். இதன்பேரில் 5 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.