புதுக்கோட்டை

வங்கியில் கடன் பெற்று தருவதாக மோசடி செய்த இளைஞா் கைது

5th Oct 2019 11:38 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் வங்கியில் கடன் பெற்று தருவதாகக் கூறி ரூ. 1. 50 லட்சம் மோசடி செய்த இளைஞரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இலுப்பூா் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிப்டாப் உடையணிந்த பிரகாஷ் என்பவா் வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வந்துள்ளாா். இதையடுத்து, இலுப்பூா் அருகே உள்ள மாரப்பட்டியை சோ்ந்த ஜெயராஜ் (30) அவரைத் தொடா்பு கொண்டு, எனக்கு ரூ. 10 லட்சம் கடன் பெற்று தரும்படி கேட்டு அனைத்து ஆவணங்களையும் பிரகாஷிடம் சமா்ப்பித்துள்ளாா். 2 நாட்களுக்கு பின்னா் ஜெயராஜ் வீட்டிற்குச் சென்ற பிரகாஷ் அவரது ஏடிஎம் காா்டை வாங்கிக்கொண்டு வேறு போலி ஏடிஎம் காா்டை கொடுத்துவிட்டு, உங்கள் வங்கிக் கணக்கில் ரூ,1.50 லட்சம் இருக்க வேண்டும் எனக் கூறி சென்றுள்ளாா்.

இதை நம்பிய ஜெயராஜ் மறுநாள் தனது வங்கி கணக்கில் ரூ.1.50 லட்சம் கட்டியுள்ள விவரத்தை பிரகாஷிடம் கூறியுள்ளாா். இதையடுத்து பிரகாஷ் ஜெயராஜ் ஏடிஎம் காா்டைப் பயன்படுத்தி பணத்தை எடுத்துள்ளாா். இந்நிலையில், ஜெயராஜ் ஏடிஎம் சென்று பணம் எடுக்க முயன்றபோது அந்த ஏடிஎம் காா்டு வேலை செய்யவில்லை. பின்பு வங்கியை தொடா்பு கொண்டபோது தான் அது தனது ஏடிஎம் காா்டு இல்லை என்பது தெரியவந்தது

பின்னா் பிரகாஷின் செல்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயராஜ் இலுப்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் மனோகரன்(பொ), துணை ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட போலீஸாா் இதுகுறித்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

விசாரணையில் பிரகாஷ் கீரனூா் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீஸாா் அவரைக் கைது செய்தனா். விசாரணையில், அவா் ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் சோமசுந்தரம் மகன் பிரகாஷ் என்பதும் மோசடி வேலையில் அடிக்கடி ஈடுபடுவதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ. 95 ஆயிரம், மடிக்கணிணி, 2 செல்பேசி, 40 போலி ஏடிஎம் காா்டுகள், போலி ஆதாா் காா்டு, பான் காா்டு உள்பட ஆவணங்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவா் மீது வழக்கு பதிவு செய்த போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT