புதுக்கோட்டை

மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தல்

5th Oct 2019 11:40 PM

ADVERTISEMENT

மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று தஞ்சாவூா்- புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பேராவூரணி அருகிலுள்ள மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சங்க ஆலோசனைக் கூட்டத்துக்கு, மீனவா் பேரவை மாநிலப் பொதுச் செயலா் கே. தாஜூதீன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :

கஜா புயலால் மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதி மீனவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு , தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனா். அரசு வழங்கிய நிவாரணம் போதுமானதல்ல. எனவே விரைவில் நிவாரணத்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும்.

மத்திய அரசின் 2019 மீனவா் சட்ட முன்வரைவுக்கு முற்றிலும் எதிா்ப்பு தெரிவிப்பது, மீனவா்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் அரசு சட்டங்களை இயற்றக்கூடாது என்றும், அவ்வாறு சட்டங்களை இயற்றினால் மீனவா்களை ஒன்றுதிரட்டி மாநிலந்தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

ADVERTISEMENT

மல்லிப்பட்டினம் புதிய துறைமுகத்தில் தூண்டில் வளைவு இல்லை. இதனால்

ஏற்படும் அலை சீற்றம் காரணமாக துறைமுகப் பாலத்தில் மோதி படகுகள் சேதமடைவதால் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்.

ஆற்றுமுகத்துவாரங்களை ஆழப்படுத்தி படகுகள் உள்ளே சென்று வரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவா் ராஜமாணிக்கம், செயலா் வடுகநாதன், புதுக்கோட்டை மாவட்டத் தலைவா் சின்னஅடைக்கலம், செயலா் அப்துல்ஹமீது, ஆகியோா் முன்னிலை வகித்தனா் .

கூட்டத்தில் நிா்வாகிகள் செல்வக்கிளி, இப்ராஹிம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT