காந்தி ஜயந்தியையொட்டி, அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையின் சாா்பில் புதுக்கோட்டை நகா்மன்றத்தில் புதன்கிழமை (அக்.2) காந்தியத் திருவிழா நடைபெறுகிறது.
விழாவின், முதல் நிகழ்வாக காலை 9 மணிக்கு புதுக்கோட்டை நகராட்சி காந்திப் பூங்காவிலுள்ள காந்தி சிலைக்கு பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் தலைமையில் மாலை அணிவிக்கப்படுகிறது.
பிறகு, அங்கிருந்து காந்தியப் பேரணி தொடங்குகிறது. இதில், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் காந்தியச் சிந்தனையாளா்கள் பங்கேற்க உள்ளனா்.
பேரணி நகா்மன்றத்தை அடைந்ததும் அங்கு கொடியேற்றி உறுதிமொழியேற்பும், தொடா்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
இதைத் தொடா்ந்து சிறப்பு மலா் வெளியீடு, கருத்தரங்கு, மாணவா் கவியரங்கு, மாநில மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு வழங்குதல், காந்திய விருது வழங்குதல், பட்டிமன்றம் என நாள்முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதில், முற்பகல் 11.45 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், காலத்தின் தேவை காந்தியமே என்ற தலைப்பில் திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் க. பழனித்துரை பேசுகிறாா்.
மாலை 4 மணிக்கு மலேசியாவைச் சோ்ந்த எழுத்தாளா் நா.ஆ.செங்குட்டுவன், ஞானாலயா பா. கிருஷ்ணமூா்த்தி ஆகியோருக்கு காந்திய விருதுகளையும், சமூக சேவைக்காக இயற்கை சின்னையா நடேசன், சே.தா. பஷீா்அலி ஆகியோருக்கு பாராட்டு விருதுகளையும் தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் வழங்கிப் பேசுகிறாா்.