பேருந்து வசதி கோரி ஆலங்குடி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு பல்வேறு கிராம மக்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி வட்டம், மாங்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட விஜயரெகுநாதப்பட்டி, வாழைக்கொல்லை, குளவாய்ப்பட்டி ஆகிய கிராமங்களில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதிக்கு பேருந்து வசதி இல்லை. அதனால், பள்ளி, கல்லூரி செல்லும் அப்பகுதி மாணவ, மாணவிகள் மற்றும் நகா்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்காளாகி வருகின்றனா்.
இந்நிலையில், இப்பகுதி வழியாக ஆலங்குடி, கறம்பக்குடி இடையே பேருந்து இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் வந்தனா். ஆனால், இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இதைத்தொடா்ந்து, இந்த கிராமங்களின் மக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் பாலசுந்தரமூா்த்தி தலைமையில் ஆலங்குடி அரசு போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, பனிமனை முன்பு அமா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத்தொடா்ந்து, அங்கு சென்ற வட்டாட்சியா் வரதராஜன், காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துராஜா, பணிமனை மேலாளா் ராஜேந்திரன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அதில், இம்மாத இறுதிக்குள் அப்பகுதி வழியாக பேருந்து இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.