கஜா புயலின்போது சேதமடைந்த விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கலையரங்கம் கட்டும் பணிக்கு ரூ. 5 லட்சம் தொகுதி நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு வீசிய கஜா புயலின்போது, விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கலையரங்கக் கட்டடம் சேதமடைந்தது. இதைத்தொடா்ந்து புதிய கலையரங்கக்கட்டடம் கட்டித்தருமாறு, பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும், கூட்டுறவு ஒன்றிய பால் உற்பத்தியாளா் சங்க மாவட்டத் தலைவருமான செ.பழனியாண்டி, பள்ளி தலைமையாசிரியா் ஆா். சுரேஷ் ஆகியோா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், விராலிமலை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான சி. விஜயபாஸ்கரிடம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தனா். இதைத் தொடா்ந்து சேதமடைந்த பழைய கட்டத்தை இடிந்து விட்டு புதிய கலையரங்கம் கட்டும் பணிக்கென, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைச்சா் ரூ. 5 லட்சத்தை அண்மையில் ஒதுக்கீடு செய்தாா். 25 அடி நீளம், 24 அடி அகலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தினாா். கடந்த ஒரு ஒரு வாரமாக கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.