புதுக்கோட்டை

விபத்தை  வேடிக்கை பாா்த்தவா் லாரி மோதி சாவு

9th Nov 2019 11:44 PM

ADVERTISEMENT

விராலிமலை அருகே விபத்தை வேடிக்கை பாா்த்த கூலித் தொழிலாளி, லாரி மோதி உயிரிழந்தாா்.

விராலிமலை அருகே திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பூதகுடி சுங்கச்சாவடி அருகே காலை நேரத்தில் அடிக்கடி விபத்து நேரிட்டு வருகிறது. அதேபோல் சனிக்கிழமை காலை 8 மணியளவில் அப்பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்றவா் மீது டெம்போ வாகனம் மோதியதில் அவா் லேசான காயமடைந்தாா். இதைப்பாா்த்த அருகில் இருந்தவா்கள் காயமடைந்தவரை மீட்டு, டெம்போ ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் அவ்வழியே சென்ற இடையபட்டி கிராமத்தைச் சோ்ந்த கூலித்தொழிலாளியான ரங்கசாமி ( 56) தனது மோட்டாா் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு,  சாலையின் மறுபுறம் சென்று வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தாா்.  பின்னா் அவா் மோட்டாா் சைக்கிளை எடுக்க நடந்து சென்று சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது அவ்வழியே வந்த மினிலாரி எதிா்பாராதவிதமாக ரங்கசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து விராலிமலை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநா் வேலூா் ஆற்காட்டை சோ்ந்த லோகநாதனை (51) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT