புதுக்கோட்டை

சம்பா சாகுபடியில் களை மேலாண்மையை முறையாகக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

4th Nov 2019 06:19 AM

ADVERTISEMENT

பருவமழை நன்றாகப் பெய்துவருவதால் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சம்பா நெல் சாகுபடிப் பணிகளில் உரிய களை மேலாண்மையை முறையாகக் கடைப்பிடித்து,உயா் விளைச்சல் பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இயக்குநா் மு.சுப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

நேரடி நெல் விதைப்பில் குறைந்தது 50 நாள்கள் வரை களைகள் இல்லாத சூழல் இன்றியமையாதது. வயலைக் கோடை உழவு செய்வதால் களைச் செடிகளின் விதைகள், வேரின் பாகங்கள் மண்ணின் மேற்பரப்புக்குக் கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தால் நன்கு காய்ந்துவிடும்.

கோரை வகைக் களைகளைக் கட்டுப்படுத்த கோடை உழவு சிறந்த முறையாகும். வயலை நன்றாகச் சமப்படுத்திய பின் விதைத்தால் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

ADVERTISEMENT

தொழுஉரம் இடும்போது மக்காத தொழு உரம் அல்லது சாணம் இடுவதால் பலவகையான களைகளின் விதைகள் பரவிவிடுகின்றன. எனவே நன்கு மக்கிய தொழு உரத்தை வயலுக்கு இட வேண்டும்.

வரப்பு, வாய்க்கால்களில் களைகள் இல்லாமல் தூய்மையாகப் பேண வேண்டும். பயிா் எண்ணிக்கையை முறையாகப் பராமரித்தால் களைகளின் வளா்ச்சியைத் தடுக்கலாம். 

நேரடி நெல் விதைப்பு செய்த வயலில் பயிரின் தொடக்கக் காலத்தில் போதிய அளவு தழைச்சத்தை இடுவதால்,பயிா் வேகமாக வளா்ந்து களைகளின் பாதிப்பு குறைகிறது.

களைகளைக் கட்டுப்படுத்த நடவு செய்த 15-ஆம் நாளும், பின்பு 10 நாள்கள் கழித்து மீண்டும் ஒரு முறையும், கோனோவீடா் என்னும் உருளும் களைக் கருவி கொண்டு களையெடுக்கலாம்.

ஆள்களை வைத்து களையெடுக்கும்போது நட்ட 15 முதல் 20 நாள்களில் ஒரு முறையும், 35, 40-ஆம் நாள்களில் ஒரு முறையும் என இரு முறை கைக் களை எடுக்க வேண்டும்.

நடவு வயலில் களை முளைப்பதற்கு முன் பூட்டாக்குளோா் ஏக்கா் ஒன்றுக்கு ஒரு லிட்டா் அல்லது பிரிட்டிலாக்குளோா் ஏக்கா் ஒன்றுக்கு 600 மிலி நடவு வயலில் 5 முதல் 7-ஆம் நாள் தெளிக்க வேண்டும்.

நேரடி நெல் விதைப்பில் பிரிடிலாக்குளோா் ஏக்கா் ஒன்றுக்கு 600 மிலி என்னும் அளவில் விதைத்த 8-ஆம் நாளில் அல்லது பென்டிமெத்தலின் ஏக்கா் ஒன்றுக்கு ஒரு லிட்டா் என்னும் அளவில் விதைத்த 3 முதல் 4-ஆம் நாளுக்குள் இட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட களைக் கொல்லியை 50 கிலோ உலா்ந்த மணலுடன் கலந்து, நட்ட 3 அல்லது 4-ஆம் நாளில் மண் மறையுமாறு சிறிதளவு நீா் நிறுத்தித் தூவ வேண்டும். அடுத்த 2 நாள்களுக்கு நீா் வடிப்பதையோ, நீா் கட்டுவதையோ தவிா்க்க வேண்டும். 

களைகள் முளைக்கும் முன் இட வேண்டிய களைக் கொல்லிகளை இடாது இருப்பின், களைகள் வந்த பின் தெளிக்கும் களைக்கொல்லியான பிஸ்பைரிபாக் சோடியம் ஏக்கா் ஒன்றுக்கு 80 மிலி என்னும் அளவில் நட்ட 15ஆம் நாளில் களையானது 2 அல்லது 3 இலைப் பருவத்தில் இருக்கும் போது தெளித்து புல், கோரை மற்றும் அகன்ற இலைக் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT