விராலிமலை வட்டாரத்துக்குள்பட்ட பேராம்பூரில் விவசாயிகளுக்கு நெல் பயிா்நிலை அடிப்படையிலான பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராமு, பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்து மேலும் பேசியது:
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, தரமான நெல் விதை ரகங்கள், மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுதல், வரப்பில் பயறுவகை பயிா் ஆகிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து நெல் சாகுபடியில் நல்ல மகசூல் பெறலாம் என்றாா். மேலும், மானிய உதவிகள், தொழில்நுட்பங்கள் ஆகியவை வழங்கப்படுவது குறித்தும் விளக்கிக் கூறினாா்.
விழாவில், புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநா் அலுவலக மத்திய திட்டங்களின் வேளாண் அலுவலா் பாண்டி, விவசாயிகளுக்கான தொழில்நுட்பப் பயிற்சியை வழங்கினாா். மேலும் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யும் நெல் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.435 பிரிமியம் செலுத்தி பயிா்க் காப்பீடு செய்யும்போது, சேதாரம் ஏற்படும் பட்சத்தில் ஏக்கருக்கு ரூ.29,800 பெறலாம் என்றாா். மேலும், பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.6,000 வழங்கும் திட்டத்தில் இதுவரை சேராத விவசாயிகள் உடனடியாகப் பதிவு செய்து பயன்பெறவும், பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3,000 பெறும் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் தங்களை உடனடியாக இணைத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.
பயிற்சியில், வேளாண் அலுவலா் ஷீலா ராணி, வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஆனந்தஜோதி, உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்கரபாண்டியன், அருண் குமாா், பா்கானா பேகம் , கயல்விழி, ஷாலினி ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.