புதுக்கோட்டை

கல்லாக்கோட்டை மது ஆலையை மூட வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

29th Jun 2019 09:30 AM

ADVERTISEMENT

கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டையில் இயங்கும் தனியார் மது ஆலையை மூட வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் , கல்லாக்கோட்டை ஊராட்சியில் இயங்கி வரும் தனியார் மதுபான ஆலையால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறி தமிழ் தேசிய பேரியக்கத்தின் மகளிர் ஆயம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் இணைந்து கையெழுத்து இயக்கம் நடத்தியது.  
இதுகுறித்து கையெழுத்து இயக்கத்தினர் கூறியதாவது:
மது ஆலையால் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த மது ஆலை ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீரை மிக , மிக ஆழத்திலிருந்து உறிஞ்சுவதால், சுற்றுவட்டார கிராமங்களில் வேளாண்மைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலத்தடி நீர் காலியாகி விட்டது. 
வேளாண்மை செய்ய முடியாமல் பாலைவனம் போல் காட்சி அளிக்கின்றன.  
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், இந்த ஆலைப்பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த 600 ஏக்கர் அரசு வேளாண் விதைப் பண்ணை மூடப்பட்டு விட்டது. இதனால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், வேளாண்மை வளர்ச்சிக்கான புதிய கண்டுபிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்றனர். 
மது ஆலையால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்து பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் இதுபற்றி விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கி விண்ணப்ப படிவங்களில் கையெழுத்து பெற்றனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT