பொன்னமராவதி அருகேயுள்ள மேலமேலநிலை கிராமத்தில் விவசாயிகளுக்கு கூட்டுப் பண்ணையம் அமைத்தல் தொடர்பான பயிற்சி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
பொன்னமராவதி வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா)திட்டத்தின் கீழ் நடைபெற்ற பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குநர் சிவராணி தலைமைவகித்து உழவர் ஆர்வலர் குழு அமைப்பதற்கான அடிப்படை விவரங்கள், கடைபிடிக்கவேண்டிய முக்கிய விதிகள், பதிவேடுகள் பராமரிப்பு, உழவன் செயலி செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
துணை வேளாண் அலுவலர் முருகன் கூட்டுப் பண்ணையத்தின் அங்கங்கள், திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினார். உழவர் உற்பத்தியாளர் குழு அமைத்தல், அதன் செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடு, பொருளாதார மேம்பாட்டு முறை குறித்து வேளாண் அலுவலர் சுபத்ரா விளக்கினார்.
பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு கையேடுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் ரவிராஜன் வரவேற்றார்.
உதவி தொழில்நுட்ப மேலாளர் ஸ்ரீநிதி நன்றி கூறினார்.