புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வட்டார வள மையத்தின் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி வட்டாரக் கல்வி அலுவலர் முத்துக்குமார் தொடக்கி வைத்தார். அறந்தாங்கி வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு. சிவயோகம் மற்றும் நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் சென்ற மாணவ மாணவிகள் மருத்துவ முகாம் நடைபெறுவதன் நோக்கம், உடல் பரிசோதனை மற்றும் வரும் முன்காப்போம் உள்ளிட்டவை குறித்த கோஷங்களை எழுப்பி அதுகுறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கிச் சென்றனர். 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேரணியில் சிறப்பு ஆசிரியர்கள் செந்தில், சசிகலா, பெரியநாயகி, மற்றும் ரேவதி, ஆசிரியர் பயிற்றுநர்கள் கோமதி, பார்வதி, மகேஸ்வரி, சசிகுமார், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.