புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்கள் 7 பேருக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.10.50 லட்சத்துக்கான காசோலைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மாலதி கூட்டத்துக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற 410 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில் முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து சாலை விபத்துகளில் உயிரிழந்த 7 பேரின் வாரிசுகளுக்கு ரூ. 10.50 லட்சத்துக்கான காசோலைகளை மாலதி வழங்கினார்.
சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.