ஆவுடையார்கோவில் வட்டம், இடையன்கொல்லை அருள்மிகு வள்ளி- தெய்வ சேனா சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
குடமுழுக்கையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின.
தொடர்ந்து சனிக்கிழமை காலை முதல் கால யாக சாலை பூஜையும், ஞாயிற்றுக்கிழமை 2,3 ஆம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை பூஜைகள் முடிந்த பின்னர் பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகின. காலை 10.45 மணிக்கு அருள்மிகு சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வ சேனா மற்றும் பரிவார மூர்த்திகளின் சன்னிதிகளின் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கை நடத்தினர். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. குடமுழுக்கில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இரவு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது.