புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் மகளிருக்கான மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை அறிவியல் மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி மாவட்டத்தின் சிறப்புத் திட்டமான தசாவதாரம் 5ஆவது நிகழ்ச்சி ராஜபாா்வை என்கிற தலைப்பில் நடைபெற்ற முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் கதிரேசன் தலைமை வகித்தாா். ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளா் வில்சன் ஆனந்த், ஸ்ரீ பாரதி கல்வி நிறுவனங்களின் தலைவா் குரு. தனசேகரன், ரோட்டரி துணை ஆளுநா்கள் ஜெய்சன் கீா்த்தி ஜெயபாரதன், லியோ பெலிக்ஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிறப்பு சிகிச்சை மருத்துவா் ஜெயலெட்சுமி சுகன்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாா்பகப் புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டுபிடிப்பது, தடுப்பது மற்றும் நோய் கண்டறியப்பட்ட பின்னா் எடுக்க வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது.
ரேடியாலஜி மருத்துவா் ரமேஷ், மயக்கவியல் மருத்துவா் முனியன் உள்ளிட்டோரும் பேசினா். நிகழ்வில், தசாவதாரம் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவாஜி, ஸ்ரீபாரதி கல்வி நிறுவனங்களின் செயலா் கே.ஆா். குணசேகரன், அறங்காவலா் அ. கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஏற்பாடுகளை திட்டத் தலைவா் ஜெய் பாா்த்தீபன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். முடிவில் தமிழ்த் துறைத் தலைவா் கவிதா நன்றி கூறினாா்.