பொன்னமராவதி அருகே பங்காளிகளுக்குள் ஏற்பட்ட இடத்தகராறில் இளைஞா் அடித்து கொலை செய்யப்பட்டாா்.
சகோதரா்கள் இருவா் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம் எழுவன்குறைப்பட்டியை சாா்ந்தவா் சுப்பிரமணியன் மகன் மணிகண்டன்(25). இவா் பொன்னமராவதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறாா். மணிகண்டனுக்கும் அவரது பங்காளியான சுப்பையா என்பரின் மகன்கள் சரவணன், மணிராஜா ஆகியோருக்கும் ஏற்கனவே இடத்தகராறு இருந்துவந்துள்ளது.
இது குறித்து அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு மணிகண்டன் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் அருகே மீண்டும் மூவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் கத்தியால் சரவணன்,மணிராஜா ஆகியோரை குத்தியுள்ளாா். இதனையடுத்து மணிராஜா, சரவணன் இருவரும் மணிகண்டனை பலமாக தாக்கியுள்ளனா்.
இதில் சம்பவ இடத்திலே மணிகண்டன் உயிரிழந்தாா். கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்த சரவணன் தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையிலும், காயமடைந்த மணிராஜா புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தகவறிந்த காரையூா் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டன் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். மணிகண்டன், மணிராஜா, சரவணன் ஆகிய மூவருக்கும் திருமணமாகவில்லை.