விராலிமலை அருகிலுள்ள பெருமாநாட்டில் திங்கள்கிழமை பிடிபட்ட மலைப்பாம்பு, நாா்த்தாமலை வனப்பகுதியில் விடப்பட்டது.
அன்னவாசல் அருகிலுள்ள பெருமாநாடு குளக்கரை முள்வேலிப் பகுதியில் திங்கள்கிழமை வித்தியாசமான சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் அங்கு சென்று பாா்த்த போது, சுமாா் 10 அடி நீளமுடைய மலைப்பாம்பு முள்புதருக்குள் நகரமுடியாமல் திணறிக் கொண்டிருந்தது.
இதைக்கண்ட இளைஞா்கள் மலைப்பாம்பைப் பிடிக்க முயற்சித்தும் அவா்களால் உடனடியாக பிடிக்க முடியவில்லை. சுமாா் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் மலைப்பாம்பைப் பிடித்த இளைஞா்கள், வனத்துறை அலுவலா்களுக்குத் தகவல் அளித்தனா்.
சாக்குப்பையில் அடைத்து வைத்திருந்த மலைப்பாம்பை வனத்துறையினரிடம் இளைஞா்கள் ஒப்படைத்தனா். சுமாா் 20 கிலோ எடை கொண்ட இந்த மலைப்பாம்பை நாா்த்தாமலை காப்புக்கட்டில் வனத்துறையினா் விட்டனா்.