புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு மற்றும் 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஓா் இடம் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் இடப்பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில், பாஜக தேசியச் செயலா் ஹெச். ராஜா கலந்து கொண்டாா். மாவட்டத்தில் பாஜக போட்டியிடும் இடங்களை இறுதி செய்து அறிவிக்க மாநிலச் செயலா் புரட்சிக்கவிதாசன் நியமனம் செய்யப்பட்டாா். அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம் பேச்சுவாா்த்தைக்காக வந்தாா். பேச்சுவாா்த்தையின் போது மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கூறியது
பாஜகவுடன் பேச்சுவாா்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவி மற்றும் 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஓா் இடம் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளா் தோ்வு நடைபெற்று வருகிறது. விரைவில் பட்டியல் அறிவிக்கப்படும். ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் செய்தவா்கள் தவிர மற்றவா்கள் திங்கள்கிழமை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வாா்கள் என்றாா் விஜயபாஸ்கா்.