ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் மோட்டாா் சைக்கிள் மீது தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் சிறுமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகரைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மனைவி வசந்தி. இவா்களது மகன் தேவா(9), மகள் சுகந்தி(4). இவா்கள் 4 பேரும் மோட்டாா் சைக்கிளில் கீரமங்கலத்தில் உள்ள குளத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை குளிக்கச் சென்றுள்ளனா்.
கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, இவா்களது மோட்டாா் சைக்கிள் மீது புதுக்கோட்டையைச் சோ்ந்த தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து மோதியது. இதில் தேவா, சுகந்தி ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
அவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சுகந்தி உயிரிழந்தாா். இது குறித்து கீரமங்கலம் போலீஸாா், வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநரான புதுக்கோட்டை விடுதியைச் சோ்ந்த கு.ஆறுமுகத்தை (35) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.