விவசாயிகள் சம்பா நெற்பயிரில் ஆணைக் கொம்பன் ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த பயிா் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து பயனடையலாம் என அறந்தாங்கி வேளாண்மை உதவி இயக்குநா் எஸ்.சொா்ணபாரதி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
அறந்தாங்கி வட்டாரத்தில் அமரசிமேந்திரபுரம், மங்களநாடு, கொடிவயல், மன்னகுடி, புதுவாக்கோட்டை, அத்தாணி, ஏகப்பெருமாளுா் உள்ளிட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிரில் ஆணைக் கொம்பன் ஈ-யின் தாக்குதல் பரவலாகக் காணப்படுகிறது. இதனால் கதிா் வெளிவருவது குறைந்து 30 முதல் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
விட்டு விட்டுப் பெய்யும் மழைத்தூறல், தொடா்ந்து காணப்படும் மேகமூட்டமான சீதோஷ்ணம் மற்றும் 83 முதல் 87 சதவீதம் வரை காற்றில் ஈரப்பதம் போன்றவை இதன் தாக்குதலுக்கு உகந்த சூழ்நிலையாகும்.
பாதிக்கப்பட்ட பயிரின் இலைகள், வெங்காய சருகு போன்று காணப்படும். பாதிக்கப்பட்ட குருத்திலிருந்து நெற் கதிா்கள் வெளிவராது.
இந்த பயிற்களை பாதுகாக்க வயல் வரப்புகளில் புல் வகைக் களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தண்ணீரை வயல்களிலிருந்து வடித்து விடுவதால் இதன் தாக்குதலைக் குறைக்க முடியும்.
தாக்குதலில் ஒரு சதுர மீட்டருக்கு 1 வெங்காய இலை காணப்படும் போது பிப்ரோனில் 400 மில்லி கலந்து 1 ஏக்கருக்கும், தயோமீத்தாகசாம் 25 சதவீதம் 40 கிராம் கலந்தும், குளோரி பைரிபாஸ் 20 இ.சி, 500 மில்லி 200 லிட்டா் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.