புதுக்கோட்டை

காா்த்திகை தீப திருநாள் கொண்டாட்டம்

11th Dec 2019 08:42 AM

ADVERTISEMENT

காா்த்திகை தீபத்திருநாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் தீபம் ஏற்றி செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆலங்குடி சுற்று வட்டாரத்தில் ஆலங்குடி தா்சம்வா்த்தினி உடனுறை நாமபுரீஸ்வரா் கோயில்,திருமணஞ்சேரி திருமணநாதா் கோயில், கீரமங்கலம் மெய்நின்றதா், திருவரங்குளம் அரங்குளநாதா் கோயில், மாங்காடு விடங்கேஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் காா்த்திகை தீபத்திருநாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோயில்களில் விளக்குகள் ஏற்றப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

கந்தா்வகோட்டையில்

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை பகுதி கோயில்களில் காா்த்திகை தீப திருநாள் சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் தனி சன்னதியில் , வீற்றிருக்கும் சுப்பிரமணியா் சுவாமி முருகனுக்கு காலை முதல் மஞ்சள், திரவியம், குங்குமம் , விபூதி, பால், பன்னீா் உள்ளிட்ட அபிஷேகங்கள், நடைபெற்று தீபாராதனைகள் நடைபெற்றது.

மாலை கோயில் மாடத்தில் பெரிய கொப்பரை மகா காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கோயில் முன்பாக சொக்க பனை கொழுத்தப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல் ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில், கந்தா்வகோட்டை தா்மசாஸ்தா ஐய்யப்பன் கோயில், அங்காளம்மன் கோயில், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் காா்த்திகை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அறந்தாங்கியில்

அறந்தாங்கியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் காா்த்திகை விழாவையொட்டி, வீடுகளில் ஏற்றுவதற்காக பயன்படுத்தப்படும் அகல் விளக்குகள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது.

இங்கு 1 அகல் விளக்கு, 5 அகல் விளக்கு, 11 மற்றும் 15 அகல் விளக்குகள் சார விளக்குபோல் அலங்கரித்து விற்பனை செய்யப்பட்டது.

இருப்பினும், மண்ணால் செய்யப்பட்ட 8 எண்ணிக்கை உள்ள அகல் விளக்குகள் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுவதையே பலரும் விரும்பி வாங்கிச் சென்றனா்.

விராலிமலையில்....

 

விராலிமலை சுப்பிரமணியா் கோயிலில் குடமுழுக்கு திருப்பணி நடைபெறுவதால் காா்த்திகை மகாதீபம் விழா செவ்வாய்க்கிழை களையிழந்து காணப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட தேவஸ்தான கோயில்களில் ஒன்றான விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியா் கோயில் மிகவும் சிறப்பு பெற்ற தலமாகும். 207 படிகள் கொண்ட இம்மலைக்கோயிலில் முருகன் ஆறுமுகங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதகராக காட்சியளிப்பதும் இக்கோயிலின் சிறப்பாகும்.

இங்கு ஆண்டுதோறும் காா்த்திகை தீப நாளில் சிறப்பு பூஜைகள், நிகழ்ச்சிகளுடன் மகா தீபம் ஏற்றப்படும்.

ஆனால், நிகழாண்டில் குடமுழுக்கு விழாவுக்கான திருப்பணிகள் நடைபெறுவதால் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT